அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு; உடல்நலம் விசாரித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
கொரோனா பாதித்த அமைச்சர் கே.பி.அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டு கொண்ட போதும், அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக ஆஸ்பத்திரி அதிகாரி தெரிவித்தார். அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல் நிலை சீராக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அவரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்து உள்ளார். இதுபற்றி ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story