முதுகலை மருத்துவ படிப்பு தேர்ச்சி முடிவுகளுக்கு தடை விதிக்கக்கூடாது - ஐகோர்ட்டில், மத்திய அரசு மனு
கொரோனா சிகிச்சைக்கு போதுமான டாக்டர்கள் இல்லை. எனவே முதுகலை மருத்துவ படிப்புக்கான தேர்ச்சி முடிவுகளுக்கு தடை விதிக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
சென்னை,
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு, அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி மத்திய சுகாதாரம் மற்றும்
குடும்பநலத்துறையின் சார்பில் சுகாதார சேவைகளுக்கான உதவி தலைமை இயக்குனர் பி.சீனிவாஸ் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த ஒரு சுதந்திரமான அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதத்துக்கு குறையாமல் தேசிய நுழைவு தேர்வு மூலம் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு 1986-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
எனவே நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளங்கலை மருத்துவ படிப்பில் 15 சதவீத இடங்களும், முதுகலை மருத்துவ படிப்பில் 25 சதவீதம் இடங்களும் வழங்கப்பட்டது.
நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் நாட்டில் உள்ள எந்த ஒரு மருத்துவ கல்லூரிகளையும் தேர்வு செய்யும் விதமாக இந்த திட்டம் முதலில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2005-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, முதுகலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு 25 சதவீதத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எஸ்.சி.பிரிவு மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும், எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்களும் கடந்த 2007-08-ம் கல்வியாண்டு முதல் வழங்கப்படுகிறது.
எத்தனை சதவீதம்?
நாடு முழுவதும் உள்ள மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கடந்த 2007-ம் ஆண்டு அரசிதழ் வெளியிட்டது. முதுகலை மருத்துவம், பல் மருத்துவம் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கி மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மற்றொரு உத்தரவை பிறப்பித்தது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக மருத்துவ இடங்களை ஒரு முறை ஒதுக்கிவிட்டால், அந்த இடங்களில் மாநில அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறை பொருந்தாது. அந்த இடங்கள் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றிதான் நிரப்பப்படும்.
2020-ம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ கவுன்சிலிங்கில், எஸ்.சி. பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5
சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் மட்டும் (கிரிமீலேயர் அல்லாதவர்களுக்கு) 27 சதவீதமும், மாற்றுத்திறனாளிக்கு 5 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு கிடையாது
இந்த கவுன்சிலிங்கில் இரு சுற்றுகளில் நிரப்பப்படாத அகில இந்திய இடங்கள், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் திருப்பி வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் இடங்களை அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையில் மாநில அரசுகள் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே இடஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு வருகிற ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண மனுவில், மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரம், எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், மொத்த இடங்களில் 50 சதவீதம் மிகாமலும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
1986-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களை தவிர வேறு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு கிடையாது.
இந்த வழக்குகளை தொடர்ந்துள்ள அரசியல் கட்சிகளில் சில கட்சிகள் மத்தியில் கூட்டணியில் அங்கம் வகித்தபோது பின்பற்றப்பட்ட முறைதான், தற்போதும் பின்பற்றப்படுகிறது. முதுகலை மருத்துவ படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் கவுன்சிலிங் நடத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 11-ந்தேதியும், கடந்த 16-ந்தேதியும் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள் எல்லாம் தேர்வு செய்துள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க போதுமான டாக்டர்கள் இல்லை.
இந்த நிலையில், இந்த தேர்வு நடவடிக்கைக்கு ஏதாவது இடைக்கால தடை விதித்தால், அது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் தடை உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு வருவதால், மனுதாரர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story