10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2020 4:00 AM IST (Updated: 21 Jun 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி என அறிவித்துள்ளார். காலாண்டு, அரையாண்டு மற்றும் மாணவ-மாணவிகளின் வருகை பதிவேட்டின் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கும் பணி சரியான முறையில் செல்கிறது. இதுவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடுகளை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 75 சதவீதம் ஒப்படைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுத வரவில்லை. மதிப்பெண் பட்டியலில் கையெழுத்து போடுவதற்காகவே தான் வந்தனர். தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் குறித்த கருத்துக்களை பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள் வெளியிடுவது தவறு. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நடத்துவது சம்பந்தமாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

பள்ளிகள் மீது நடவடிக்கை

12-ம் வகுப்பு தேர்வை 34 ஆயிரத்து 864 மாணவர்கள் எழுதவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் 671 மாணவர்கள் 3 பாடங்களில் தேர்வு எழுதாதவர்கள் என தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதுவதற்கு விருப்பமா? என்று இவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 25, 26-ந் தேதிகளில் முடிவு செய்யப்படும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவது குறித்து புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story