பவானிசாகர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி - பெற்றோர் கதறல்
பவானிசாகர் அணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தார்கள்.
பவானிசாகர்,
கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் முகுந்தராஜ். இவருடைய மகன் பிரனேஷ் (வயது 20). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் யஸ்வந்த் (20). கோவையில் உள்ள ஒரு பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
மாதேஸ் என்பவரின் மகன் கதிரேசன் (20). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும், துரைசாமி என்பவரின் மகன் ரகுராம் (20). கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும், அன்னூர் தெலுங்குபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் சுரேஷ்ராஜ் (20) கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டும் படித்து வந்தார்கள்.
பிரனேஷ், யஸ்வந்த், கதிரேசன், ரகுராம், சுரேஷ்ராஜ் இவர்கள் 5 பேரும் நண்பர்கள். தற்போது கொரோனா காரணமாக கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே இருந்த 5 பேரும் நேற்று காலை ஒன்றாக சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணைக்கு செல்ல விரும்பினார்கள்.அதன்படி நேற்று காலை 3 மோட்டார்சைக்கிள்களில் 5 பேரும் பவானிசாகருக்கு வந்து சேர்ந்தார்கள். பின்னர் அணை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றி பொழுதை கழித்த அவர்கள், மதியம் 12 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியான சித்தன்குட்டைக்கு வந்தார்கள்.
கரையில் உட்கார்ந்து அணையை ரசித்த அவர்களுக்கு அணையின் நீர்த்தேக்கத்தில் இறங்கி குளிக்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இதில் சுரேஷ்ராஜ் மட்டும் தான் குளிக்க வரவில்லை என்று கரையிலேயே உட்கார்ந்து கொண்டார்.
இதனைதொடர்ந்து பிரனேஷ், யஸ்வந்த், கதிரேசன், ரகுராம் 4 பேரும் நீர்த்தேக்க பகுதியில் இறங்கி குளிக்க தொடங்கினார்கள். அப்போது அவர்கள் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் 4 பேரும் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்கள். கைகளை ஆட்டியபடி அவர்கள் தண்ணீரில் மூழ்குவதை பார்த்தை சுரேஷ்ராஜ் பதறிப்போய் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்‘ என்று அபயக்குரல் எழுப்பினார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் 4 மாணவர்களையும் காப்பாற்ற முடியவில்லை.
சுரேஷ்ராஜ் உடனே பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பிறகு சிறிது நேரத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சித்தன்குட்டைக்கு விரைந்து வந்தார்கள்.
அதன்பின்னர் அந்த பகுதி வாலிபர்கள் சிலரை உதவிக்கு வைத்துக்கொண்டு ஆற்றில் இறங்கி தேடினார்கள். மாலை 3.30 மணி அளவில் 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 மாணவர்களின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்குள் மாணவர்களின் பெற்றோர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அலறியபடி வந்தார்கள். அவர்கள் தங்களின் மகன்களின் உடல்களை பார்த்து கதறி துடித்தது காண்போரையும் கண்கலங்க செய்தது.
Related Tags :
Next Story