கொரோனா மறைந்தது என்ற செய்தி தான் முதலமைச்சருக்கு நற்பெயர் வாங்கித் தரும் - திமுக தலைவர் ஸ்டாலின்


கொரோனா மறைந்தது என்ற செய்தி தான் முதலமைச்சருக்கு நற்பெயர் வாங்கித் தரும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 21 Jun 2020 3:20 PM IST (Updated: 21 Jun 2020 3:23 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா மறைந்தது என்ற செய்தியால் தான் முதலமைச்சருக்கு நற்பெயர் வருமே தவிர அதனை மறைப்பதால் அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனா எப்போது முடியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் என்று கூறியிருந்தார். இதனை குறிப்பிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

“கொரோனா பரவலுக்கு இதுவரை பலர் மீதும் பழிபோட்டு வந்த தமிழக முதலமைச்சர் தற்போது இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார். மனிதனுக்கு சளி, காய்ச்சல் நோய் வரத்தான் செய்யும் என்று முதல்வர் சொல்லியிருப்பது மருத்துவ உலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாதாரண சளியும் கொரோனா வைரசும் ஒன்றா?

அனைத்துக்கும் அரசாங்கம், அரசாங்கம் என்று சொல்லக்கூடாது என்று முதல்வர் சொல்லியிருப்பது, இந்த அரசாங்கத்தால் எதுவும் செய்யமுடியவில்லை என்பதன் ஒப்புதல் வாக்குமூலமா?

தமது அலுவலக தனிச்செயலாளரின் மறைவுக்கு வெளியிட்ட அறிக்கையில், ‘உடல்நலக்குறைவால்’ என்று கூறி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? கொரோனா தொற்று குறித்து அன்பழகனிடமே கேட்டு உறுதிப்படுத்திய பிறகுதான், அவர் நலமடைய வேண்டி ட்விட்டரில் பதிவிட்டேன். அமைச்சருக்கே கொரோனா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், வழக்கம் போல் பழனிசாமி மறைக்க முயற்சிக்கிறார்.

ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் அமைச்சர் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று 'ட்வீட்' செய்திருந்தாரே அதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்?

கொரோனா மறைவதுதான் முதலமைச்சருக்கு நற்பெயர் தருமே தவிர, அதனை மறைப்பதல்ல! இனியேனும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story