பிளஸ்-1 பாடங்கள் குறைப்பு: என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பை தகர்த்தெறியும் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு


பிளஸ்-1 பாடங்கள் குறைப்பு:  என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பை தகர்த்தெறியும் - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 22 Jun 2020 2:00 AM IST (Updated: 22 Jun 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 பாடங்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம்கிடைக்கும் ஒருவாய்ப்பையும்கூட தகர்த்தெறியும் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இதுகுறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தி.மு.க. விருதுநகர் வடக்குமாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 வகுப்பு தேர்வுமுடிவுகள் ஜூலை மாதம் முதல்வாரத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தகையோடு, இந்தக்கல்வியாண்டில் பிளஸ்-1 வகுப்பில் மாணவர்களின் சேர்க்கைக்கான பாடப்பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டு, புதியபிரிவுகள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கவே 6 பாடங்களாக இருந்தவை, தற்போது 5 ஆக குறைக்கப்பட்டு மொத்த மதிப்பெண்கள் 600-க்கு பதில் இனி 500 ஆக இருக்குமென்றும், இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் உயர்கல்வியில் பயில விரும்பும் படிப்பிற்கான தேர்வினை பதினொன்றாம் வகுப்பில் சேரும் போதே இறுதி செய்துகொண்டு அதற்கேற்ப கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக்கொள்ளலாம் என தேன்தடவிய விஷத்தை பள்ளிக்கல்வித்துறை சாமர்த்தியமாக மறைத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ பள்ளிக்கல்வி மாணவர்களின் மனஅழுத்தம் போக்கவே பாடங்களை குறைத்திருப்பது போன்ற மாயத்தோற்றம் இருந்தாலும், அது உண்மை நோக்கம் அல்ல.

இடம் கிடைக்கும் வாய்ப்பை தகர்த்தெறியும்

மருத்துவக்கல்லூரியில் இடம்கிடைக்காத மாணவர்களுக்கு தமிழகத்தின் முண்னணி என்ஜினீயரிங் கல்லூரிகளான அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிலையம் உள்ளிட்ட எந்த என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் இடம் கிடைக்கும் ஒருவாய்ப்பையும்கூட அடியோடு தகர்த்தெறியும் கள்ளநோக்கத்துடனேயே மேற்கொண்ட பிரிவுகள் தந்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது வெள்ளிடை மலையாக விளங்கும்.

தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை அடியோடு அழிக்கத்துடிக்கும் இந்த மாபெரும் துரோகத்தை தி.மு.க. வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த முடிவுகளை உடனடியாகத் திரும்பப் பெற்று பழைய நடைமுறையைத் தொடரவேண்டும் என வலியுறுத்துவதோடு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் இந்தமுடிவு விபரீதத்திற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story