விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு - 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்


விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு - 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 23 Jun 2020 4:30 PM IST (Updated: 23 Jun 2020 4:30 PM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்ததாக கூறி, இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளை சிறையில், அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதை தொடர்ந்து இன்று காலை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து, உறவினர்கள், வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்- நாகர்கோவில் சாலையில் நிகழ்ந்த இந்த சாலை மறியல் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் தனபிரியா, அவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் அனைவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story