ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2020 4:50 PM IST (Updated: 23 Jun 2020 4:50 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கண் மருத்துவமனை டீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பள்ளிகளை திறக்க காலதாமதம் ஆகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற அச்சம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எழுந்துள்ளது.

இந்நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. இதன் மூலமாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் கண்ணி மூலமாக பாடங்களை கற்று வருகின்றனர். இருப்பினும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக பல குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் மாணவர்களின் உடல்நலம் பாதிப்பு. அதாவது மாணவர்கள் தொடர்ந்து கண்ணி திரையைப் பார்ப்பதால் அவர்களுக்கு பார்வை குறைபாடுகள் ஏற்படலாம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.  

இந்நிலையில் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க கோரி விமல் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்கக் கோரியும், 6 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன் லைன் வகுப்புக்களை நடத்த உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, ஆன் லைன் வகுப்புக்களில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் கண்பாதிப்பு குறித்து 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க , அரசு கண் மருத்துவமனை டீன்-னுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்து உள்ளனர்.

Next Story