“ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?” - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி


“ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?” - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
x
தினத்தந்தி 23 Jun 2020 7:24 PM IST (Updated: 23 Jun 2020 7:24 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது, அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த மனுக்களில், பள்ளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் தான் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரிடர் மேலாண்மைக்காக மட்டுமே பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது தவறு என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, “ஆன்லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது, அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்குகள் தொடர்பாக, ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Next Story