அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி; டாக்டர்கள் தீவிர சிகிச்சை


அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி; டாக்டர்கள் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 1 July 2020 5:15 AM IST (Updated: 1 July 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அதன் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா பரவலை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள 6

அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, மொத்தம் உள்ள 15 மண்டலங்களும் 6 அமைச்சர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டன. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குமண்டலங்கள் 13, 14, 15 (அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர்) ஆகிய 3 மண்டலங்கள் ஒதுக்கப்பட்டன.

இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து, கொரோனா நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இந்தநிலையில், கடந்த மாதம் 17-ந்தேதி அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை

மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக, பத்திரிகைகளில் செய்தி வெளியான நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அரசு தரப்பில் மறுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தெரிவித்தார்.

இதற்கிடையே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வேறு யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அமைச்சர் கே.பி.அன்பழகன் ‘மியாட்’ ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பதை ‘மியாட்’ ஆஸ்பத்திரி நேற்று உறுதி செய்துள்ளது. தொடர்ந்து, அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக, அந்த ஆஸ்பத்திரியின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஆரம்பக்கட்டத்தில் எந்தவொரு அறிகுறியும் காணப்படவில்லை. அவரது சி.டி. ஸ்கேன் பரிசோதனை தகவல் இயல்பானதாகவே இருந்தது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இரண்டாவதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று

உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு 29-ந்தேதி (நேற்று முன்தினம்) லேசான இருமல் ஏற்பட்டது. அதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்திருக்கிறார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், ஆர்.டி.அரசு, செஞ்சி மஸ்தான் ஆகியோரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story