9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்தார்


9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு - கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்தார்
x
தினத்தந்தி 2 July 2020 2:13 AM IST (Updated: 2 July 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களின் பதவி காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யும் வகையில் கவர்னர் அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு 2019-ம் ஆண்டு டிசம்பர் 6 மற்றும் 11-ந் தேதியிட்ட ஆணையைத் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகியவற்றிலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்காக, வாக்காளர் பட்டியல் தயாரித்தல் போன்ற முன்னேற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இதற்கிடையில், திடீரென்று கொரோனா தொற்று நோய் பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகளால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் போர்கால அடிப்படையில் கொரானா நோய் தடுப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள், மீட்பு மற்றும் நலவாழ்வு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

எனவே, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிட்டபடி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் தனி அலுவலர்களின் பதவிக் காலமானது இந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதியன்று முடிவடைந்தது. தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை வரும் டிசம்பர் 31-ந் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தொடர்புடைய சட்டங்களை திருத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கேற்ற வகையில் முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில், தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டத்தை ஜூன் 30-ந் தேதி கவர்னர் பிறப்பித்துள்ளார்.

அதேபோல புதிதாக மறுசீரமைக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி, தனிஅலுவலர்களின் பதவிக்காலத்தையும் டிசம்பர் 31-ந் தேதி வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டத்தை கவர்னர் பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story