சென்னை புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவி ஏற்பு: மக்களின் நன் மதிப்போடு விடைபெறுகிறார் ஏ.கே.விஸ்வநாதன்


சென்னை புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று பதவி ஏற்பு: மக்களின் நன் மதிப்போடு விடைபெறுகிறார் ஏ.கே.விஸ்வநாதன்
x
தினத்தந்தி 2 July 2020 4:00 AM IST (Updated: 2 July 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புதிய போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கிறார். தற்போதைய கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மக்களின் நன்மதிப்போடு விடைபெறுகிறார்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாநில அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனராக அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) காலை பதவி ஏற்றுக்கொள்கிறார். மகேஷ்குமார் அகர்வால் சென்னைக்கு புதிய அதிகாரி அல்ல. அவர் சென்னையில் பூக்கடை துணை கமிஷனர், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். கமிஷனர் விடுமுறையில் செல்லும் கால கட்டங்களில் அவர் கமிஷனர் பொறுப்பையும் கவனித்துள்ளார். அந்த வகையில் அவர் சென்னையின் கலாசாரம் மற்றும் மக்களை பற்றி நன்கு அறிந்தவர், தெரிந்தவர் ஆவார்.

இவர் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர். இவரது தந்தை பிரகாஷ் சந்த் அகர்வால் வக்கீல் ஆவார். தந்தை வழியில் இவரும் சட்டப்படிப்பில் தேர்ச்சி ஆனார். போலீஸ் மேலாண்மை படிப்பிலும் இவர் தேர்ச்சி பெற்றுள்ளார். வக்கீல், நீதிபதி என இவரது பணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவரது வாழ்க்கை சட்டம் சார்ந்த போலீஸ் துறையோடு இணைந்தது. இவர் 1994-ம் ஆண்டில் தனது 23 வது வயதில் ஐ.பி.எஸ்.தேர்ச்சி பெற்று இந்திய போலீஸ் துறையில் காலடி எடுத்து வைத்தார். தமிழக காவல்துறையில் இவர் தனது பணியை தொடங்கினார்.

தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் சூப்பிரண்டாக பணியாற்றினார். தேனி மாவட்டத்தில் இவர் பணியாற்றிய போது சாதி கலவரம் நிகழாமல் அமைதியை நிலை நாட்டினார். கள்ளச் சாராய ஒழிப்பில் சாதனை படைத்தார். இதற்காக அரசின் விருது கிடைத்தது. 7 ஆண்டுகள் இவர் சி.பி.ஐ.யில் பணியாற்றினார். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பணியாற்றி முக்கிய வழக்குகளை திறம்பட கையாண்டார்.

சென்னை ரெயில்குண்டு வெடிப்பு வழக்கு, ரெயில் பெட்டி கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளை போன வழக்குகளில் துப்பு துலக்கினார். சென்னை சிறுசேரி பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகளை கைது செய்து, அவர்களுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்று தர பெரிதும் உதவினார்.

மதுரை போலீஸ் கமிஷனர் பதவியும் இவரை அலங்கரித்துள்ளது. முகத்தில் கடுமை கலந்த ஒரு புன்முறுவல், பணியில் நேர்மை, சிறந்த புலனாய்வு இவரது சாதனைக்கு துணை நின்றவை. இவர் கொஞ்சும் தமிழில் பேசுவது மக்களுக்கு பிடிக்கும்.

இவரது தாயார் தேவகி தேவி. இவரது மனைவி வனிதா சென்னை பல்கலைகழகத்தில் பேராசிரியர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது தலைசிறந்த பணிக்காக போலீஸ் விருது மற்றும் முதல்-அமைச்சர் விருதுகளை பெற்றவர்.

தற்போதைய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை மக்களின் நன்மதிப்போடு விடைபெறுகிறார். அவர் கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமாக தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார். ஏதோ பணியாற்றினோம் என்று இல்லாமல், சென்னை போலீசுக்கு பல்வேறு வகைகளில் சிறப்பை சேர்த்துள்ளார்.

சென்னை முழுக்க 3-வது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதை ஒரு சவாலாக, வேள்வி போல செய்து வெற்றி கண்டார். சென்னையில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் அவரது பெயரைத்தான் சொல்லும். இந்த கேமராக்களின் செயல்பாட்டால் சென்னையில் குற்றங்கள் குறைந்தன. குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிப்பதற்கு இது பெரிதும் உதவியது.

சென்னை போலீசை விஞ்ஞான ரீதியிலான துப்புதுலக்கும் பணிக்கு அழைத்து சென்ற பெருமை இவரைச்சாரும்.

அனைத்து தரப்பினரையும் அரவணைத்து சென்றதில் இவருக்கு நிகர், இவரே. போலீசார் அத்துமீறி நடந்த சம்பவங்களில் கூட பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, போலீஸ்-பொதுமக்கள் நட்பில் புதிய பரிமாணத்தை உண்டாக்கினார். துப்பு துலக்குவதற்கு உதவிய பொதுமக்களையும், சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும் நேரில் அழைத்து பாராட்டுவதிலும் இவர் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பணியாற்றினார்.

போலீஸ் பணி மட்டும் அல்லாது ஒசை இல்லாமல் பல சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டார். கொரோனா விழிப்புணர்வு பணியை தாமே நேராக களத்தில் இறங்கி செய்தது அனைவருக்கும் தெரியும். பல்வேறு ஜாம்பவான்கள் அலங்கரித்த கமிஷனர் பதவிக்கு பெருமை சேர்த்து விட்டு இவர் விடைபெறுவதாக சென்னை மக்கள் இவரை போற்றுகிறார்கள்.

Next Story