ஊழல் இல்லையென்றால் பொதுவெளியில் என்னுடன் விவாதிக்க தயாரா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி சவால்


ஊழல் இல்லையென்றால் பொதுவெளியில் என்னுடன் விவாதிக்க தயாரா? - அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஐ.பெரியசாமி சவால்
x
தினத்தந்தி 2 July 2020 4:15 AM IST (Updated: 2 July 2020 3:50 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் இல்லை என்பது உண்மையென்றால் பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகளுடன் பொதுவெளியில் என்னுடன் விவாதிக்க தயாரா? என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

முதல்-அமைச்சர் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அறிக்கை விட்டு நான் சொல்லித்தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது என ஒரு தவறான தகவலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடத்திலே ஏற்படுத்தி வருகிறார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த மார்ச் 16-ந் தேதியில் இருந்தே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆலோசனைகளை ஒன்றிரண்டை நிறைவேற்றி மக்கள் உயிர்காக்கும் எண்ணற்ற அரிய ஆலோசனைகளை அ.தி.மு.க. புறக்கணித்து விட்டது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர். ஆனால் சொந்த மதுரை மாவட்ட மக்களை அவர் கொரோனாவின் பிடியில் குலை நடுங்க வைத்துவிட்டு, சென்னையில் அவர் தீவிரமாக இருக்கிறார். எங்கள் தலைவரின், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் பணி அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

கொரோனா காலத்தில் மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அதை வரவேற்க வேண்டியது அரசின் கடமை. அதிலும் எதிர்க்கட்சி, மாபெரும் ஒன்றிணைவோம் வா என்ற மக்கள் இயக்கத்தை நடத்திய போது அதை வரவேற்க மனமில்லை என்றாலும், கொச்சைப்படுத்தலாமா? பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை வழங்கும் அறிக்கைகளையும், மக்கள் நல உதவிகளையும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினராக இருப்பவரே கொச்சைப்படுத்தலாமா?

ஜூன் 1-ந்தேதி மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை. ஆனால் ஜூன் 30-ந்தேதி, அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 2,557 பேர். 3 பேராக இருந்த கொரோனா மரணம், நேற்று மதுரையில் 32 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக, தினமும் 200 பேர் கொரோனாவால் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மதுரைக்கு மட்டும் தனி ஊரடங்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரிடர் மேலாண்மை உறுப்பினரின் மாவட்டத்திலேயே இந்த நிலையா?

டெண்டர் விவாகரத்தில் முகாந்திரமில்லாமல் குற்றம் சாட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு மூக்கறுபட்டு நீதிமன்றத்திலிருந்து வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றது, என அபாண்டமான பொய் சொல்கிறார். லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை விட்டு, புகாரில் முகாந்திரமில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க வைத்தது யார்? ஊழல் இல்லை என்று அமைச்சர் சொல்வது உண்மையென்றால், பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகள் அனைத்தையும் பொது வெளியில் கொண்டு வந்து என்னுடன் விவாதிக்க அமைச்சர் உதயகுமார் தயரா?.

அதேபோல, முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளைத் தெரிந்து கொண்டு முன்கூட்டியே ஆலோசனைகள் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் அறிக்கைகளை விடுகிறார், என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி கொடுக்கிறார். உங்கள் முதல்-அமைச்சரின் முடிவு எடுக்கும் ரகசியம் எங்கள் கட்சி தலைவருக்கு தெரிகிறது என்று சொல்வதற்கு உங்களுக்கு ஒருமாதிரியாக இல்லையா? எனவே எங்கள் கட்சி தலைவர் அளிக்கும் பொன்னான ஆலோசனைகளைக் கேளுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story