சாத்தான்குளம் வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தபோது, அவர் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறி மிரட்டியதாக தகவல் வெளியானது. அந்த அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கடம்பூர் ராஜூ என்றும் பேசப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார். சாத்தான்குளம் வழக்கில் கைதான ஸ்ரீதருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்னையும் ஆய்வாளர் ஸ்ரீதரையும் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என்று அமைச்சர் கூறி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறியதாவது:-
விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கும் உடனடியாக முதல்வர் நிவாரணம் அறிவித்தார். அதன்படி, இன்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு எந்த ஜாதி மத பாகுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறான தகவல். பொய்யான வதந்தியை சில விஷமிகள் தவறாக பரப்புகிறார்கள். அது நிரூபணம் ஆகியுள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story