சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு


சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 12:15 AM GMT (Updated: 4 July 2020 9:29 PM GMT)

சென்னையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளை முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். மதுரையில் 12-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த சில வாரங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.

சென்னையில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.2020-ந் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. இருந்தபோதிலும் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு 5-ந் தேதி (இன்று) வரை அமலில் இருக்க உத்தரவிட்டு இருந்தேன்.

தற்போது, அதாவது 6-ந் தேதி (நாளை) முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

* பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

* தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடம் இருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.

* தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* வணிக வளாகங்கள் (மால்) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), ஏற்கனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

* மற்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரை, கடந்த மாதம் 19-ந் தேதிக்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மதுரையில் 12-ந் தேதி வரை நீட்டிப்பு


மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடந்த ஜூன் 24-ந் தேதியன்று

அதிகாலை 12 மணி முதல் 5-ந் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கொரோனா நோய்த் தொற்றை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கை மதுரை மாவட்டத்தில் அதே பகுதிகளில் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6-ந் தேதி (நாளை) அதிகாலை 12 மணி முதல் 12-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடை பிடிக்கப்படுகிறது. இதனால் மளிகை, காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக நேற்று கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story