கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த போது தீப்பிடித்தது பணம் நாசம்; தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு


கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த போது தீப்பிடித்தது பணம் நாசம்; தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 July 2020 3:30 AM IST (Updated: 6 July 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தீப்பிடித்து எந்திரத்தில் இருந்த பணம் எரிந்து நாசமானது.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாச்சலில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அதன் நுழைவுவாயில் அருகே யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு அந்த வங்கியின் ஏ.டி.எம். மையமும் உள்ளது. அதன்படி கடந்த 3-ந் தேதி வங்கியின் மேலாளர் அப்பாராவ், உதவி மேலாளர் விஸ்வநாதன், அலுவலர் சக்திவேல் ஆகியோர் அந்த ஏ.டி.எம். மைய எந்திரத்தில் ரூ.6 லட்சத்திற்கான நோட்டுக்களை நிரப்பி உள்ளனர். ஏற்கனவே இருந்த ரூ.2 லட்சம் உள்பட மொத்தம் ரூ.8 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பண பரிவர்த்தனைக்கு பிறகு நேற்று முன்தினம் நிலவரப்படி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 100 இருந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதை அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சத்திரம் போலீசாரும், ரோந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்தது. ஏ.டி.எம். எந்திரமும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் தீயில் கருகியது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணமும் நாசமானதாக தெரிகிறது. ஆனால் எவ்வளவு தொகை எரிந்து போனது என்ற விவரம் தெரியவில்லை.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 3 பேர் கியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவும், அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவும் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்ததும் தெரிந்தது. இதனிடையே தனியார் கல்லூரியின் நுழைவுவாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் கொள்ளையர்கள் 3 பேர் அதிகாலை 2.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தை நோட்டுமிட்டுச் செல்வதும், பின்னர் 3 மணி அளவில் சாக்குபையுடன் மையத்திற்குள் நுழைவதும், 3.30 மணிக்கு அவர்கள் வெளியே செல்வதும், அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதும் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

மர்மநபர்கள் கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது தீப்பிடித்திருக்க வாய்ப்பு உள்ளது. தீப்பற்றியவுடன் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். இந்த கொள்ளை முயற்சியில் தீப்பிடித்ததால் எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2½ லட்சம் முழுவதும் எரிந்து நாசமானதா? அல்லது மர்ம நபர்கள் பணத்தை எடுத்து சென்றனரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மர்மநபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story