கொரோனா நோயாளிகளை ஒதுக்க கூடாது; தமிழக சுகாதாரத்துறை செயலர் பேட்டி
கொரோனா நோயாளிகளை ஒதுக்க கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மதுரை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளன. சென்னையில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சமீப நாட்களாக மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகின்ற 12ந்தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், மதுரையில் கிராமப்புறங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. தனிமைப்படுத்துதல் முகாம்களில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என கூறினார்.
மதுரையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கொரோனா பாதித்த நோயாளிகளை ஒதுக்க கூடாது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். இந்த பேட்டியின்பொழுது, தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் உடனிருந்தார்.
Related Tags :
Next Story