சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை


சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 July 2020 2:51 PM IST (Updated: 7 July 2020 2:51 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம் மெரினா கடற்கரை காணமால்போகும் என ஐஐடி ஆய்வு ஒன்று எச்சரித்து உள்ளது.


சென்னை

சீனாவில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இதில் சென்னை அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்   கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

ஆனால், சென்னை மக்களைப் பொறுத்தவரை, '100 ஆண்டுகளில் இல்லாத' மற்றும் 'பேரழிவு' போன்ற சொற்கள் ஒன்றும் புதியவை அல்ல.

ஆம், 2015ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நூற்றாண்டு காணாத பெருமழையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளமும் ஏற்படுத்திய சேதத்தை எதிர்கொண்ட சென்னை மக்களுக்கு அந்த சொற்களுக்கான பொருள் நன்றாகவே புரியும்.

இந்த நிலையில், சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையை விட பல மடங்கு அதிகமான மழைப் பொழிவு வரும் காலங்களில் இருக்கலாம் என்று சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தை (ஐஐடி) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை, மும்பை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்களில் பருவ நிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அதில் இருந்து மீள்வதற்கான வழிகள் குறித்தும் ஆராய்வதற்கான இந்திய அரசின் சிறப்பு திட்டமொன்றின் கீழ், 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்தும் அது எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் தொடர்பாகவும் சென்னை ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், சென்னையைப் பொறுத்தவரை வரும் காலங்களில் மழைப்பொழிவு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரிக்கக் கூடும் என்றும், இது 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தை விட பல மடங்கு பேரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு அதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படுமா? அப்படி ஏற்பட்டால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்பதை சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு ஆய்வு செய்ததாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட சென்னை ஐஐடி ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் பாலாஜி.

இதன்படி, சூப்பர் கம்ப்யூட்டர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2035, 2055, 2075 உள்ளிட்ட ஒவ்வொரு இருபதாண்டு கால இடைவெளியிலும் சென்னையில் மழைப்பொழியின் தீவிரம் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதுபோன்ற தீவிர மழைப்பொழிவின் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து பேசிய  பேராசிரியர் பாலாஜி, "2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துடன் ஒப்பிடுகையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக மெரினா உள்பட சென்னையின் தற்போதைய கடற்கரைப்பகுதிகள் பலவும் மழையின் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு கடலால் ஆட்கொள்ளப்படலாம். மேலும், சென்னை மற்றும் அதை சுற்றிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் மழைநீர் கடலில் கலக்க வழியின்றி பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும்" என்று எச்சரிக்கிறார் அவர்.

இந்த ஆராய்ச்சி குறித்த கட்டுரை 'கரன்ட் சயின்ஸ்' என்னும் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளது.

Next Story