கொரோனாவை கண்டு அதீத பயம் வேண்டாம்!


கொரோனாவை கண்டு அதீத பயம் வேண்டாம்!
x
தினத்தந்தி 8 July 2020 5:23 AM IST (Updated: 8 July 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை கண்டு அதீத பயம் வேண்டாம்!

சென்னை,

உலக அளவில் சமூக பரவலாகியுள்ளது கொரோனா வைரஸ் என்பதை மறுக்க முடியாது! ஆனால்,அது இன்னும் சமூகப் பேரழிவாக பரிணாமம் பெறவில்லை என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்!

ஏனென்றால் கொரோனா வைரசால் தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு நாளும் இறப்பவர்கள் 6,000-க்கும் குறைவானவர்களே! ஆனால், உலக அளவில் தினசரி பல்வேறு நோய்கள் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சமாகும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் மூன்றரை மாதங்களாகத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மூத்த மருத்துவரான அ.சுந்தரராஜ பெருமாளிடம் பேசிய போது, ‘மக்கள் முதலில் தேவையில்லாத அச்சத்தில் இருந்து விடுபட வேண்டும். அச்சம் தான் முதல் எதிரி.இங்கே வரும் பலர் முதலில் மிக இயல்பாக ஆரோக்கியமாகத் தான் உள்ளனர். ஆனால் கொரோனா சோதனையில் ‘பாசிடிவ்’ என ரிசல்ட் வந்ததும் அடுத்த நொடியே ஆடிப் போய்விடுகிறர்கள்! உடனே,உடம்பெல்லாம் வியர்த்து,மூச்சுவிடவே சிரமப்படுகின்றனர். கொரோனா குறித்த அதீத பயமே இதற்கு காரணம்! அவர்களிடம் பேசி தைரியப்படுத்திய பிறகு மெல்ல,மெல்ல தெளிவு பெறுகின்றனர்.அப்புறம் ஐந்தே நாட்களில் குணமடைகின்றனர்.

தமிழக மக்கள் தொகை சுமார் எட்டு கோடி! இதில் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு மட்டுமே கொரோனா பாதித்தது. இந்த எண்ணிக்கையிலும் வெறும் மூன்று சதவீதமானவர்களுக்கே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அதிலும்1.5 சதவீதமானவர்களே இறக்கிறார்கள்! இறப்பவர்களிலும் மிகப் பெருவாரியானவர்களுக்கு ஏற்கனவே பலவித நோய்கள் இருப்பதே முக்கிய காரணம்! இன்னும் சிலர் தேவையில்லாத பயத்தில் இறந்துவிடுகின்றனர். ஆக,கொரோனாவால் இறப்பவர்கள் மட்டுமே என்பது மிக,மிக குறைவு தான்! இதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்!

யார் ஒருவருக்கு கொரோனா வந்தாலும் எவரும் அச்சப்பட வேண்டியதில்லை. அவரைப் பார்த்து மற்றவர்களும் அச்சப்பட வேண்டியதில்லை.கொரோனா கிட்டதட்ட அனைவருக்கும் இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் ஓரிரு மாதங்களிலோ,வருடங்களிலோ வரவே செய்யும்! இன்னும் சிலருக்கு இருப்பது கூட தெரியாமல் உடலில் இருந்துவிட்டு சின்ன சிரமங்களை தந்து செல்லவும் கூடும். ஊரடங்கு மூலம் அது பரவும் வேகத்தை மட்டுமே அரசாங்கத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியுமே தவிர, வருவதையே முற்றிலும் தடுத்துவிட முடியாது.அதே சமயம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டது என்பதால் மற்றவர்களுக்கு கண்டிப்பாக வந்துவிடுவதுமில்லை.

வடசென்னை போன்ற நெரிசல் மிகுந்த இடங்களில் பத்து குடும்பத்திற்கு இரண்டே பொது கழிவறை இருக்கும்! ஆயினும் கிருமி நாசினியைப் தெளித்து சுத்தம் செய்து பயன்படுத்தினால் அச்சப்பட வேண்டியதில்லை. அங்கும் ஒருவருக்கு கொரோனா வருவதால் மற்றவர்களுக்கும் வந்தே தீரும் என்ற நிலையில்லை! கருவுற்ற தாய்க்கு கொரோனா இருந்தாலும் குழந்தைக்கு இருப்பதில்லை. அந்த தாய் குழந்தைக்கு பால் கொடுத்தாலும் வருவதில்லை.இவை மருத்துவத்தில், அனுபவத்தில் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக, கவனமாக, சுத்தமாக, எச்சரிக்கையாக இருங்கள்.அதையும் மீறி கொரோனா வந்தால், பயமோ, கவலையோ வேண்டாம் என்பது தான் இன்று மக்களுக்கு முக்கியமாக சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.

கொரோனா வந்தவர்களை தற்காலிகமாக தனிமைப்படுத்துகிறோம். இதை தவறாக அர்த்தப்படுத்தி, அவர்களை சமூகபுறக்கணிப்புக்கு ஆளாக்க வேண்டியதில்லை. ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக இந்த மண்ணில் நிலவிய தீண்டாமையை ஒழிப்பதற்கு எவ்வளவோ போராட்டங்களும், தியாகங்களும் தேவைப்பட்டது. அப்படி ஒழிக்கப்பட்ட தீண்டாமை கொரோனா அச்சத்தின் மூலம் மீண்டும் நவீன வடிவத்தில் தலைதூக்கி இருக்கிறது. ஆனால் கொரோனாவை காரணமாக்கி சொந்த ரத்த உறவுகளிடம் இருந்து கூட அன்னியப்பட்டு விடலாகாது!

Next Story