சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறைப்பு பா.ஜ.க. சொந்த விருப்பங்களை திணிப்பதா? வைகோ கண்டனம்


சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறைப்பு பா.ஜ.க. சொந்த விருப்பங்களை திணிப்பதா? வைகோ கண்டனம்
x
தினத்தந்தி 9 July 2020 12:28 AM IST (Updated: 9 July 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறைப்பு பா.ஜ.க. சொந்த விருப்பங்களை திணிப்பதா? என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும், “உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்?, இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி“ ஆகிய அத்தியாயங்களையும் நீக்கியுள்ளது.

பாடத்திட்டம் குறைப்பு எனும் பெயரில் பா.ஜ.க. அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங்களை நீக்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். கொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மத்திய பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தங்களது சொந்த விருப்பங்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

மாணவர்களின் நெஞ்சத்திலும், நஞ்சுகலக்கும் வகையில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் போன்ற பாடங்களை நீக்கி இருக்கிறது. இந்தியாவில் மக்களாட்சி அபாயகட்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இவைஎல்லாம் சான்றுகளாகும். கல்வியாளர்கள் கொண்ட ஒருகுழுவை நியமித்து, சி.பி.எஸ்.இ. பாடங்களைக் குறைக்க வேண்டுமேயொழிய, பா.ஜ.க. அரசு கல்வித்துறையில் இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை புகுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story