மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவச வடிவில் பரோட்டா விற்பனை


மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவச வடிவில் பரோட்டா விற்பனை
x
தினத்தந்தி 9 July 2020 2:39 PM IST (Updated: 9 July 2020 2:39 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மதுரை,

மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் நேற்று ஒரே நாளில் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி உள்ளது.  இதுவரை 1,111 பேர் குணமடைந்துள்ளனர்.  3,821 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த மே மாதம் 19ந்தேதி முதல் ஜூலை முதல் வாரம் வரை கவசம் அணியாதவர்களுக்கு ரூ.41,56,950 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமையை கண்டறிந்து உடன் அபராத தொகை விதிக்க பல்வேறு கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை குழுக்கள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், பொதுமக்களில் சிலர் இதுபற்றி கவனத்தில் கொள்ளாமல் உள்ளனர்.  இந்நிலையில், மதுரை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபற்றி அந்த ஓட்டலின் மேலாளர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, பொதுமக்களிடையே முக கவசங்களை அணியவேண்டும் என்ற கவனம் இல்லை.  அதனால், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முக கவச வடிவிலான பரோட்டாக்களை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம் என கூறியுள்ளார்.

Next Story