10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் சி.பி.எஸ்.இ.அறிவிப்பு


10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் சி.பி.எஸ்.இ.அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 12:18 AM IST (Updated: 10 July 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் என சி.பி.எஸ்.இ.அறிவித்துள்ளது.

சென்னை,

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வில், கொரோனா ஊரடங்கால் சில தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. அவர்களுக்கு மீண்டும் தேர்வு தேதியை அறிவித்து, தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் அதனை ரத்து செய்து, மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த வகையில் கணக்கிடப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

அதற்கான பணிகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று சமூக வலைதளங்களில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகின. அதில் 10-ம் வகுப்புக்கு வருகிற 13-ந்தேதியும், 12-ம் வகுப்புக்கு வருகிற 11-ந்தேதியும் (நாளை) தேர்வு முடிவு வெளியாகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது வெளியான சற்று நேரத்தில் சி.பி.எஸ்.இ. தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டு, இது போலியானது என்று அதில் குறிப்பிட்டது. மற்றொரு கல்வி வாரியமான, இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலில்(சி.ஐ.எஸ்.சி.இ.) படித்து 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வுமுடிவு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் www.cisce.org, www.results.cisce.org என்ற இணையதள முகவரிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் இந்த கல்வி வாரியத்தின் கீழ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story