வினோதமாக நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம்: கல்லூரி மாணவரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டிய நண்பர்கள் வீடியோ வெளியானதால் பரபரப்பு


வினோதமாக நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம்: கல்லூரி மாணவரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டிய நண்பர்கள் வீடியோ வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2020 3:15 AM IST (Updated: 10 July 2020 2:21 AM IST)
t-max-icont-min-icon

குமரியில், கல்லூரி மாணவரை கம்பத்தில் கட்டி வைத்து சாணத்தில் குளிப்பாட்டி, கேக் வெட்டி வினோதமான முறையில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பெபிஸ் (வயது 21). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பெபிசுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள்.

இதனை அறிந்த அவருடைய நண்பர்கள், பிறந்த நாளை வினோதமான முறையில் கொண்டாட நினைத்தனர். அதன்படி, பெபிசை மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அப்போது இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து பின்பக்கமாக கட்டி வைத்து இருந்தனர்.

முதலில் நண்பர்கள் ஒவ்வொருவராக முட்டைகளை பெபிஸ் மீது உடைக்கின்றனர். அப்போது உடலில் அடிக்காமல் முட்டையை மட்டும் உடையுங்கள் என்று பெபிஸ் சிரித்துக்கொண்டே கூறினார்.

முட்டையை உடைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நண்பர்கள் உற்சாக மிகுதியால் குங்குமத்தை கரைத்து குளியல் நடத்தினர். தக்காளி பழத்தை அவர் மீது தேய்த்ததோடு, தயிர் பாக்கெட்டுகளையும் உடைத்து தலையில் இருந்து உடல் முழுவதும் அபிஷேகம் செய்தனர்.

உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்ற நண்பர் ஒருவர், சாணத்தை கரைத்து பெபிஸ் தலையில் ஊற்றினார். பின்னர் ஷாம்பு குளியல் நடத்தினர்.

இந்த குளியல் கொண்டாட்டம் முடிந்த பிறகு பெபிஸ் புத்தாடை அணிந்து கேக் வெட்டி நண்பர்களுக்கு ஊட்டியதுடன் அவரும் சாப்பிட்டார்.

இதனை வீடியோ எடுத்த நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் இப்படி நள்ளிரவில் அரங்கேறிய இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story