பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி 3 நாட்களுக்கு பிறகு தொற்று 4 ஆயிரத்தை தொட்டது


பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு பலி 3 நாட்களுக்கு பிறகு தொற்று 4 ஆயிரத்தை தொட்டது
x
தினத்தந்தி 10 July 2020 4:45 AM IST (Updated: 10 July 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 65 பேர் நேற்று உயிரிழந்தனர். ஒரே நாளில் 41 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தொட்டுள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களிலும், சென்னைக்கு அருகே உள்ள மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 41 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 42 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 103 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக உயர்ந்துள்ளது. இதில் 78 ஆயிரத்து 161 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 3 ஆயிரத்து 994 பேர் குணம் அடைந்தனர். 46 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 43 பேரும், தனியார் மருத்துவமனையில் 22 பேர் என 65 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 12 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 23 பேரும், மதுரையில் 9 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 6 பேரும், ராமநாதபுரத்தில் 5 பேரும், தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரத்தில் தலா இருவரும், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலத்தில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் திருவண்ணாமலையை சேர்ந்த பிறந்து 25 நாட்களே ஆன பெண் பச்சிளங்குழந்தையும் அடங்கும். அந்த குழந்தை உடல் நிலை சரி இல்லாமல் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் அந்த குழந்தை இறந்து உள்ளது.

தமிழத்தில் நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் 1,216 பேரும், திருவள்ளூரில் 364 பேரும், விருதுநகரில் 289 பேரும், மதுரையில் 262 பேரும், கள்ளக்குறிச்சியில் 254 பேரும், தூத்துக்குடியில் 196 பேரும், செங்கல்பட்டில் 169 பேரும், நெல்லையில் 110 பேரும், கோவையில் 98 பேரும், திருச்சி, கன்னியாகுமரியில் தலா 93 பேரும், சேலத்தில் 92 பேரும், தேனியில் 90 பேரும், வேலூரில் 87 பேரும், ராணிப்பேட்டையில் 79 பேரும், திருவண்ணாமலையில் 70 பேரும், கடலூர், காஞ்சீபுரத்தில் தலா 67 பேரும், சிவகங்கையில் 62 பேரும், ராமநாதபுரத்தில் 61 பேரும், தர்மபுரியில் 56 பேரும், புதுக்கோட்டையில் 46 பேரும், திருவாரூரில் 40 பேரும், தஞ்சாவூரில் 32 பேரும், விழுப்புரத்தில் 31 பேரும், தென்காசியில் 29 பேரும், நாகப்பட்டினத்தில் 25 பேரும், திருப்பத்தூரில் 19 பேரும், நாமக்கல், ஈரோட்டில் தலா 17 பேரும், நீலகிரியில் 13 பேரும், திருப்பூரில் 6 பேரும், பெரம்பலூர், அரியலூரில் தலா 5 பேரும், திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரியில் தலா 4 பேரும் பாதிக்கபட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று புதிதாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 2 நிறுவனங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதில் 53 அரசு நிறுவனங்களும், 47 தனியார் நிறுவனங்களும் ஆகும். தமிழகத்தில் இதுவரை 14 லட்சத்து 28 ஆயிரத்து 360 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story