செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 2நாட்களாக அநேக இடங்களில் மழை வெளுத்து வாங்கிவருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவில் இருந்து விடிய, விடிய மழை பெய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றும் மழை பெய்து இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசைகாற்று சந்திக்கும் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை, நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று, நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில், ‘திருத்தணி 8 செ.மீ., காஞ்சீபுரம், வெம்பாக்கம் தலா 7 செ.மீ., திருத்தணி, விரிஞ்சிபுரம், அரக்கோணம் தலா 5 செ.மீ., மேலாளத்தூர், ஏற்காடு, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி தலா 4 செ.மீ. மழை பெய்து இருக்கிறது.
Related Tags :
Next Story