தமிழகம் முழுவதும் 15-ந்தேதி வழங்கப்படும்: அரசுபள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


தமிழகம் முழுவதும் 15-ந்தேதி வழங்கப்படும்: அரசுபள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 11 July 2020 11:15 PM GMT (Updated: 11 July 2020 11:15 PM GMT)

தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஈரோடு, 

தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை வருகிற 15-ந்தேதி தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு மாணவ -மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை அரசு வழங்கும். புத்தக பையுடன் வழங்குவதில் உள்ள நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வழங்கப்படும்.

இது தொடர்பாக வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த முடிவினை திங்கட்கிழமை (நாளை) குழு ஒப்படைக்கிறது. அதன் அடிப்படையில் புத்தகங்கள் வழங்கப்படும். பிளஸ்-2 மாணவ -மாணவிகளுக்கு இ பீஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் இணைய வகுப்பு தொடங்கப்படுகிறது. இந்தியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இந்த கல்வி முறையை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 14-ந்தேதி தொடங்கி வைக்கிறார். உடனடியாக மாணவ -மாணவிகள் வைத்திருக்கும் மடிகணினிகளில் அதற்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்க வில்லை.

பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியில் மனித நேயத்துடன் தன்னார்வலர்கள் ஈடுபட முன்வந்தால் அரசு உதவிகள் செய்யும். ஆன்லைன் மூலம் கிராமத்து மாணவர்களுக்கும் கல்வி சென்று சேருவதில், இன்டர்நெட் இணைப்பு பிரச்சினை இருப்பதால், தொலைக்காட்சி வழி கல்வி கற்பிக்கப்படும். வகுப்பு வாரியாக நேரம் அறிவிக்கப்பட்டு அந்தந்த நேரத்தில் வகுப்புகள் நடைபெறும். எனவே அனைத்து வகுப்பு மாணவ -மாணவிகளும் தடை இன்றி வகுப்புகளை கவனிக்க முடியும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story