இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளிப்பு - டி.ஐ.ஜி. நேரில் விசாரணை


இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளிப்பு - டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
x
தினத்தந்தி 13 July 2020 5:46 AM IST (Updated: 13 July 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளித்த சம்பவத்தில் டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்தினார்.

ஆம்பூர், 

பொது முடக்கத்தின்போது சுற்றித்திரிந்த வாலிபரின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் வாலிபர் தீக்குளித்தார். இதுபற்றி அறிந்த டி.ஐ.ஜி. காமினி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளி முகிலன் (வயது 27). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆம்பூர் பஸ் நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். ஆம்பூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் பொதுமுடக்கம் காரணமாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகிலனை போலீசார் தடுத்து நிறுத்தி, பொது முடக்கத்தின்போது வெளியில் ஏன் சுற்றித் திரிகிறீர்கள் எனக் கேட்டு அவருடைய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தன்னுடைய இருசக்கர வாகனத்தை திருப்பி தருமாறு போலீசாரிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் போலீசார் வாகனத்தை திருப்பி தர மறுத்துவிட்டனர். அங்கிருந்து புறப்பட்டு சென்ற முகிலன் சற்று நேரத்தில் மீண்டும் போலீசாரிடம் வந்து தன்னுடைய வாகனத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

தரவில்லையெனில் தான் தீக்குளிப்பதாக கூறியுள்ளார். சற்று நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு வந்த அவர் போலீசார் முன்னிலையில் திடீரென தீக்குளித்துள்ளார். மேலும் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் போலீசாரை நோக்கி ஓடிச் சென்றார். அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொ. விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் ஆம்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story