திருப்போரூர் செங்காடு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது


திருப்போரூர் செங்காடு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2020 8:46 PM IST (Updated: 13 July 2020 8:46 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் செங்காடு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த செங்காடு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இமயம்குமார் என்பவருக்கும், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் என்ற இதயவர்மன் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் நிலத்துக்கு பாதை அமைப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் இமயம்குமார் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில் எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரது உறவினர் குருநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்து, கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் அந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோதலில் காயம் அடைந்த இமயம்குமார், சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் பாதை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் கீரை வியாபாரி மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் சென்னை மேடவாக்கம் அருகே பதுங்கி இருந்த எம்.எல்.ஏ. இதயவர்மனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  பின்னர் அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும்  3 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் குமார் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியால் சுட்ட வழக்கில் எம்.எல்.ஏ இதயவர்மன் உட்பட 12 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story