நாளை மறுநாள் இணையதளம் வழியாக பா.ம.க. 32-வது ஆண்டு விழா - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு


நாளை மறுநாள் இணையதளம் வழியாக பா.ம.க. 32-வது ஆண்டு விழா - டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 8:45 PM GMT (Updated: 13 July 2020 8:10 PM GMT)

பா.ம.க. 32-வது ஆண்டு விழா நாளை மறுநாள் இணையதளம் வழியாக நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை, 

இது தொடர்பாக, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் மக்கள் கடலின் நடுவே 1989-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி தொடங்கப்பட்ட சமூக ஜனநாயக இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), வரும் 16-ந்தேதி 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சியை விடவும் துடிப்பான, பொறுப்பான அரசியல் கட்சி என்றால் அது பா.ம.க.தான்.

அந்த பெருமைக்கு காரணம் சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான். பா.ம.க.வின் இதயமும் நீங்கள் தான். அதில் ஏற்படும் உயிர்த்துடிப்பும் நீங்கள் தான். இதயம் இல்லாமல் உடலின் இயக்கம் இருக்க முடியாது என்பதைப்போலவே, நீங்கள் இல்லாமல் பா.ம.க. இல்லை. உங்களால் தான் கட்சி துடிப்பாக இயங்குகிறது. ஓர் அரசியல் கட்சியின் நோக்கம் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதும், அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதும் தான். அந்த வகையில் பா.ம.க. தொடர்ந்து மிகச்சிறந்த அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது. அந்த அளவில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால், ஆட்சி என்ற அதிசய திறவுகோல் நமக்கு தேவை. அதற்காக மட்டும் தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பா.ம.க. நினைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. ஆனால், நாம் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகளோ ஏராளமாக உள்ளன.

அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது கொரோனா வைரஸ் பரவல் அச்சம் தான். அந்த அச்சம் தணிந்தவுடன் தடகள வீரர்களை போல, நமது செயல்வீரர்களாகிய பாட்டாளி சிங்கங்கள் களப்பணியாற்றுவதற்காக காத்திருக்கவேண்டும். வழக்கமாக பா.ம.க.வின் ஆண்டு விழா நாளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் அதிக அளவில் நடைபெறும். ஆனால் இப்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், வாய்ப்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் கொடியேற்றி 32-வது ஆண்டு விழாவை கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பாட்டாளிகளாகிய உங்களையெல்லாம் சந்தித்து 123 நாட்கள் ஆகிவிட்டன. உங்களை சந்திக்கவேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு நாட்களாக காத்திருக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம். அதற்கு முன்பாக பா.ம.க.வின் 32-வது ஆண்டு விழாவையொட்டி வரும் 16-ந் தேதி (நாளை மறுதினம்) இணையதளம் வழியாக நடைபெறும் ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்கவும், எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாடவும் காத்திருக்கிறேன். இணையதளத்தில் சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story