தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது - புதிதாக 4,328 பேருக்கு தொற்று; 66 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது. புதிதாக 4, 328 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 66 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 44 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 2,576 ஆண்களும், 1,752 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் கள் 23 பேரும் அடங்குவர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக உயந்துள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 50 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 66 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். 18 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. அதன்படி சென்னையில் 24 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், திருச்சியில் 5 பேரும், மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4 பேரும், காஞ்சீபுரம், சிவகங்கை, தஞ்சாவூரில் தலா 3 பேரும், சேலம், தூத்துக்குடி, திருவள்ளூரில் தலா 2 பேரும், கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி, தேனி, திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகரில் தலா ஒருவரும் அடங்குவர். நேற்றைய உயிரிழப்பு பட்டியலில் 50 வயதுக்கு மேற்பட்ட 54 நபர்கள் இடம்பெற்றனர்.
தற்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்து 32 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று 3 ஆயிரத்து 35 பேர் நலம் பெற்றனர். இதுவரை 92 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 48 ஆயிரத்து 196 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 591 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 412 பேரும், ரெயில் மூலம் வந்த 422 பேரும், சாலை மார்க்கமாக வந்த 2 ஆயிரத்து 910 பேரும், கடல் மார்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 369 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 65 குழந்தைகளும், 60 வயதுக்கு உட்பட்ட 17 ஆயிரத்து 375 முதியவர்களும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக பெரம்பலூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 2 நிறுவனங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. இதில் 53 அரசு நிறுவனங்களும், 47 தனியார் நிறுவனங்களும் ஆகும்.
தமிழகத்தில் இதுவரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story