திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை


திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 July 2020 4:45 AM IST (Updated: 15 July 2020 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்ய மறுத்ததால் காதலன் வீட்டின் முன்பு விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி வடக்கு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் அனிதா (வயது 25). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு கூலமேடு பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் விவாகரத்து பெற்றார்.

இந்த நிலையில் அனிதா டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதற்காக கெங்கவல்லியில் உள்ள ஒரு கோச்சிங் சென்டருக்கு சென்று வந்தார். அப்போது கெங்கவல்லி பேரூராட்சி மெயின் ரோட்டில் வசிக்கும் விக்னேஷ் (25) என்பவருடன், அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய அவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த 2 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்துள்ளனர்.

மேலும் விக்னேஷ் திருமண ஆசைவார்த்தை கூறி அனிதாவுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் வீட்டாருக்கும் தெரியவந்தது. இதற்கு விக்னேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் 2 பேரும் பழகி வந்தனர். தொடர்ந்து, அனிதா, விக்னேசிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் விக்னேஷ் திருமணத்துக்கு மறுத்து விட்டார்.

இதனால் அனிதா கடந்த 11-ந் தேதி கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நேற்று விசாரணைக்கு 2 பேரையும் வருமாறு அழைத்து இருந்தனர். இதன்படி நேற்று காலை கெங்கவல்லி போலீஸ் நிலையத்துக்கு அனிதா சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவரது காதலன் விக்னேஷ் வரவில்லை. இதனால் தனது காதலன் வீட்டுக்கு சென்ற அனிதா, வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் காதலன் திருமணம் செய்ய மறுத்துவிட்டாரே என்ற மனவேதனையில் நின்று இருந்த அனிதா, அங்கேயே தான் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அனிதாவை ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனை கரம்பிடிக்க வந்த காதலி, அவரது வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த அனிதாவை காக்க வைத்த போலீசார், அவரது காதலனை அழைக்கவில்லை. போலீஸ் நிலையத்துக்கும், அவரது காதலன் வீட்டுக்கும் சுமார் 200 மீட்டர் தூரம் தான் இருக்கும். போலீசார் காதலனை அழைக்காததால், நியாயம் கேட்க காதலன் வீட்டுக்கே அனிதா சென்றார். அப்போதும் ஒரு போலீஸ்காரர் கூட அவருடன் செல்லவில்லை. இதன் காரணமாக தனக்கு எந்த விதத்திலும் நியாயம் கிடைக்காது என்பதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு போலீசாரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று தெரிவித்தனர்.

Next Story