ஊரடங்கினால் வேலை இழந்தவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ‘இ-பாஸ்’ வழங்ககோரி வழக்கு - தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
ஊரடங்கினால் வேலை இழந்தவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வழங்ககோரி வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், சேசுபாலன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் பொதுமக்கள் வருமானத்தை இழந்துள்ளனர். பிழைப்புக்காக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்தவர்கள், வருமானம் இல்லாமல் ஏழ்மையில் வாடுகின்றனர்.
ஊரை காலி செய்து சொந்த ஊருக்கு குடும்பம், குடும்பமாக புறப்படுகின்றனர். ஆனால், திருமணம், துக்க நிகழ்ச்சி மற்றும் உறவினர்கள் உடல்நிலை பாதிப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது. இதனால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், வருமானம் இல்லாமலும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இதுபோன்ற நபர்களுக்கு நிபந்தனைகளுடன் ‘இ-பாஸ்’ வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் ஒரு வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story