தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 17 July 2020 12:00 AM GMT (Updated: 2020-07-17T02:25:45+05:30)

தமிழகத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பாதிரி கிராமம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கிராமத்தில் இருந்து, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானதில், வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், முருகராஜ், ஸ்ரீமுருகன், மலர், முத்து அனிஷா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வடக்காட்டுப்பட்டி கிராமம், திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வடகாட்டுப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மிதுன்கிஷோர், அரவிந்த் மற்றும் பரத் ஆகிய 3 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த இரு சாலைவிபத்துகளில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சாலை விபத்துகள் குறித்து அறிந்தவுடன், இந்த விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன். விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் 2 பேரும் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மேற்கண்ட சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரணநிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story