பா.ம.க. 32-வது ஆண்டு விழா: ‘இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்’ - தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
பா.ம.க. 32-வது ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை,
பா.ம.க.வின் 32-வது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ‘ஆன்லைன்’ வழியாக நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 125 நாட்களாக பாட்டாளி சொந்தங்களை சந்திக்க முடியவில்லை. அது தான் எனக்கு பெரும் குறையாக உள்ளது. வெகுவிரைவில் கொரோனா வைரஸ் ஒழியும். அதன்பிறகு உங்களைச் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன். பா.ம.க. தொடங்கி 31 ஆண்டுகள் முடிவடைந்து 32-வது ஆண்டு தொடங்கிவிட்டது.
ஆனால், நாம் இன்னும் இலக்கை அடைய முடியவில்லை. அந்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் தீவிரமாக பங்காற்றத் தொடங்கும்போது தான் கொரோனா வைரஸ் வந்து நமது பணிகளைத் தடுத்துவிட்டது. கொரோனா வைரஸ்
முடிவடைந்தவுடன், நாம் இதுவரை எவ்வளவு வேகத்தில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமோ, அதைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
20 வயதில் மன்னராக பொறுப்பேற்ற மாவீரன் அலெக்சாண்டர் 32 வயதிற்குள், 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக போர் நடத்தி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான் வரை அனைத்து நாடுகளையும் வென்றான். ஆனால், பஞ்சாப் மன்னன் போரஸ் என்ற புருஷோத்தமனுடனான போரில் தோற்கும் நிலை வந்தபோது, தாம் வென்ற பகுதிகளை புருஷோத்தமனிடம் கொடுத்துவிட்டு வேறு நாட்டுக்குச் சென்றான். 32 வயதில் உலகத்தையே அலெக்சாண்டர் வென்றார் என்பதுதான் வரலாறு. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், முன்னேறு... முன்னேறு... இலக்கை அடை.... இலக்கை அடை என்பதுதான்.
அலெக்சாண்டர் 32 ஆண்டுகளில் உலகை வென்றார். நாம் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இலக்கை அடைய இன்னும் வேகமாக உழைக்க வேண்டும். பா.ம.க.வின் கொள்கைகளுக்கு இணையாக வேறு எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது. அனைத்து விஷயங்களிலும் அரசுக்கு நாம் ஆலோசனைகளை கூறி வருகிறோம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படுகின்றன. நான் போராளி என்பது உங்களுக்குத் தெரியும். நாம் போராடி பல உரிமைகளை பெற்றுள்ளோம். ஆனால், நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் போராடிக் கொண்டும், ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் இருப்பது? நாம் மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டாமா? மக்களுக்கு என்னென்ன நன்மை செய்யவேண்டும், என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அதை செய்ய நாம் ஆட்சிக்கு வரவேண்டும்.
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ தான் குடிசைகளாக இருந்த சிங்கப்பூரை இன்றைய நவீன சிங்கப்பூராக மாற்றினார். தமிழ்நாட்டில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவை விட சிறந்த ஆட்சியைத் தருவார். தமிழகத்தில் அவரைவிட சிறந்த ஆட்சியை யாராலும் தர முடியாது. தமிழகத்தில் இன்னொரு கட்சித் தலைவர் இருக்கிறார். எப்படியாவது
கோட்டைக்குள் ஓடிச் சென்றாவது முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார். எனக்கு என்ன ஆசை என்றால், அவரையும், டாக்டர் அன்புமணி ராமதாசையும் ஒரே மேடையில் வைத்து ஏதேனும் ஒரு பொருள் குறித்து விவாதம் நடத்த வேண்டும். அதற்கு ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால், பலமுறை அழைப்பு விடுத்தும் கூட அந்த தலைவர் விவாதத்துக்கு தயாராக இல்லை.
நம்மிடம் இருக்கும் அளவுக்கு தமிழக மக்களுக்கான திட்டங்கள் வேறு கட்சிகளிடம் இல்லை. நமது தொண்டர்கள் அளவுக்கு உழைக்க வேறு எந்த கட்சியிலும் தொண்டர்கள் இல்லை. நாம் இப்போது உழைப்பதைப் போன்று தொடர்ந்து உழைக்க வேண்டும். இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
Related Tags :
Next Story