அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா - வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறார்
ஏற்கனவே 3 அமைச்சர்கள் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெறும் நிலையில், அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது 4-வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
நிலோபர் கபில் சமீபத்தில் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தார். சில நாட்களாக அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதனால் அவர் கடந்த 14-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், அவர் மருத்துவ கண்காணிப்பிலும் இருந்து வருகிறார்.
கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் நிலோபர் கபில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நிலோபர் கபிலின் மகனும் டாக்டருமான இத்ரீஷ்கபில் (வயது 45) மற்றும் மருமகன் முகமது காசிப் (40) ஆகியோர் வாணியம்பாடியில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமைச்சரின் மகனுக்கு சொந்தமான ஆஸ்பத்திரி மற்றும் அமைச்சரின் வீடு இருக்கும் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story