ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில் முன்பு குவிந்த பக்தர்கள் வாசலில் நின்று மனமுருக வேண்டி சென்றனர்
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களை நோக்கி பக்தர்கள் படையெடுத்தனர். வாசலில் நின்றபடியே அம்மனை மனமுருக வேண்டி சென்றனர்.
சென்னை,
ஒவ்வொரு வருடமும் வரும் ஆடி மாதம் அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு ஆடி மாதம் நேற்று முன்தினம் ஆடிக் கிருத்திகையுடன் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன.
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்கள் அடைக்கப்பட்டு இருந்தாலும், திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது. திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில், வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில், அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில், கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோவில், கோயம்பேடு தீப்பாஞ்ச அம்மன் கோவில் உட்பட நகரின் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.
கோவில்கள் அடைக்கப்பட்டாலும் பக்தர்கள் வாசலில் நின்றபடி அம்மனை மனமுருக வேண்டினர்.
சில இடங்களில் சிறிய அம்மன் கோவில்கள் திறக்கப்பட்டு இருந்தன. அங்கு அம்மனை தரிசித்ததுடன், அக்கோவில் வளாகத்தில் இருந்த புற்றுகளுக்கும் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டு சென்றதை பார்க்க முடிந்தது. கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் உள்ள புற்றுக்கு பெண்கள் பால் ஊற்றி வழிபட்டு சென்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், ஆடி மாதம் வேண்டுதல்கள், விரதங்கள் நிறைவேற்றுவதற்கு உகந்த மாதமாகும். ஆனால் இந்த முறை கோவிலுக்குச் சென்று அம்மனை தரிசிக்க முடியாமல் போய்விட்டது. எனவே பெரிய மற்றும் இட வசதி உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க அரசு ஆவண செய்ய வேண்டும். இந்த ஆடி மாதத்தில் அம்மனை தரிசிக்க கோவில் நிர்வாகங்களும் சமூக இடைவெளியில் பக்தர்கள் தரிசிக்க ஏதுவாக தடுப்புகள் அமைப்பது போன்ற உரிய ஏற்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும், என்றனர்.
Related Tags :
Next Story