தளர்வுடன் கூடிய ஊரடங்கிலும் மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்


தளர்வுடன் கூடிய ஊரடங்கிலும் மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 July 2020 4:37 AM IST (Updated: 20 July 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கிலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சென்னை

சென்னை போலீசில் நேற்றுமுன்தினம் வரை 1,517 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு உதவி கமிஷனர் உள்பட 10 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் 10 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் சென்னை போலீசில் தொற்று பாதிப்பு 1,527 ஆகவும், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,037 ஆகவும் உள்ளது.

இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் முழு ஊரடங்கு நிலவரத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே ஆய்வு செய்தபோது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கிற்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இதேபோன்று தளர்வுடன் கூடிய ஊரடங்கிலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். தேவையில்லாமல் வெளிய வரக்கூடாது. மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

சென்னை கொத்தவால்சாவடி, ரிச் தெரு ஆகிய இடங்களில் கூட்டங்கள் சேர்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காசிமேடு மீன் மார்க்கெட்டிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பொதுமக்களை நேரடியாக சந்திக்க முடியாததால் தற்போது ‘வீடியோ கால்’ மூலம் பேசி குறைகளை கேட்டு வருகிறேன். இதுவரை வீடியோ காலில், சுமார் 100 புகார்கள் வந்து உள்ளது. அதில் பாதிக்கு மேற்பட்ட புகார்கள் மீது தீர்வு காணப்பட்டு உள்ளது. மற்ற புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் யாராவது தகவல் வெளியிட்டால் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அவதூறு தகவல் வெளியிட்டால் அதற்கு முறையாக சட்டப்படி கோர்ட்டை அணுகலாம்.

போலீசாருக்கு மனஅழுத்தத்தை போக்க யோகா மற்றும் தியான பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதுவரையில் 5 ஆயிரம் போலீசாருக்கு இதுபோன்ற பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இணை கமிஷனர்கள் சுதாகர், லட்சுமி, துணை கமிஷனர் தர்மராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story