இந்த ஆண்டு முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு


இந்த ஆண்டு முதல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 July 2020 4:47 AM IST (Updated: 20 July 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து மாணவர்களை பாதுகாக்க எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முதுநிலை படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்கள் சேர்க்கைக்காக கலந்தாய்வு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல், தற்போது பி.இ., பி.டெக். 2-ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கும், பகுதிநேர பி.இ., பி.டெக். மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முதுநிலை படிப்புகளுக்கும் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடத்த உயர்கல்வித் துறை முடிவு செய்து இருக்கிறது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2015-16-ம் கல்வியாண்டு முதல் 2019-20-ம் கல்வியாண்டு வரை பகுதிநேர பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்து, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களை நேரில் வரவழைத்து கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க, இந்த ஆண்டுமுதல் பகுதிநேர பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பி.இ., பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளுக் கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களை நேரில் அழைத்து கலந்தாய்வு நடத்தப்படும். தற்போது இந்த படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாட்டு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுதவிர, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பப்பதிவு நடத்தப்பட்டு, கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக மாணவர்களை பாதுகாக்க இந்த ஆண்டு முதல் கலந்தாய்வு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் நடைபெறும்.

இந்த படிப்புகளுக்கு எப்போது முதல் விண்ணப்பப்பதிவு செய்ய வேண்டும்? அதற்கான இணையதள முகவரி குறித்த விவரங்கள், கலந்தாய்வு நடத்தப்படும் விவரங் கள் அடங்கிய அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story