பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 July 2020 4:14 AM IST (Updated: 22 July 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

“பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு உரிய இடங்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்க வேண்டும்”, என்று மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதவாத சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் தர தொடர் முயற்சி மற்றும் சமூகநீதியைச் சாய்த்திடும் செயலில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக சமூகநீதிக்கு குந்தகம் ஏற்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்தாலும், வேறு பல வழிகளைக் கையாண்டு சமூகநீதியைச் சிதைக்கிறார்கள்.

அதில் மிக முக்கியமானது ‘நீட்‘ தேர்வு. இந்தத் தேர்வின் மூலமாக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவுக்கு சாவு மணி அடித்து விட்டார்கள். சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மருத்துவக் கல்வியில் சேர்ந்திருக்க வேண்டிய 27 சதவீத (மத்திய அரசின் இடஒதுக்கீடு) பிற்படுத்தப்பட்ட மாணவர்களில், 12 சதவீதத்தினருக்கே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகள் மட்டுமல்ல, இனி ஒவ்வொரு ஆண்டும், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க, மத்திய பா.ஜ.க. அரசு பாதை வகுத்துவிட்டது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மண்டல் ஆணையம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்க பரிந்துரைத்தது.

ஆனால் 2014-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கிடைத்த தகவலின்படி தரப்பட்டது மொத்தமே 12 சதவீதம்தான். மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர்க்கு திறக்கப்பட்டிருந்த வழியை அடைத்ததன் மூலம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த அநீதி என்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, பட்டியலின சமுதாயத்தினர்க்கும் சேர்த்தே வஞ்சகம் இழைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம், பட்டியல் பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என உள்ளது.

ஆனால், இப்போது மத்திய அரசு வழங்கும் இடஒதுக்கீடு பங்கீட்டில் பட்டியலின மக்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடுதான் எனச் சொல்லப்பட்டுள்ளது. இதன்படி 3 சதவீத இடங்களைப் பட்டியலின மக்கள் இழக்க நேரிடுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு உண்மையில் 50 சதவீத இடஒதுக்கீடு தந்திருக்க வேண்டும். ஆனால் கொடுத்த 27 சதவீதத்தையே பெற முடியாத நிலை ஒருபக்கம் என்றால், பட்டியலின மக்களுக்கு உண்மையில் தந்திருக்க வேண்டியதை விட 3 சதவீதம் குறைவாகத் தருகிறார்கள். இதுதான் சமூகநீதிக்குச் சாவுமணி அடிக்க முயற்சிக்கும் சதிச் செயலாகும்.

இந்துக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று தொண்டை வற்றச் சப்தமிடும் பா.ஜ.க.வினருக்கு பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்களாகத் தெரியவில்லையா? அவர்கள் என்ன இந்துமத எதிரிகளா?

இந்துக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்வது உண்மையாக இருந்தால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு உரிய இடங்களை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிரதமரும், மத்திய பா.ஜ.க. அரசும் வழங்க வேண்டும். இடஒதுக்கீடு பறிபோகும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு, தமிழக அரசு கொள்கைக்காக குரல் கொடுக்க வேண்டும்.

சட்டநீதிக்கு இணையானது சமூகநீதி. அதைக் காப்பது அவசியம். எப்போதெல்லாம் இடஒதுக்கீட்டைப் பறிக்கிறார்களோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டவிரோத செயல்களின்மூலம், சமூகத்தில் உட்பூசல்களை ஏற்படுத்துவார்கள். பாதிப்புகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக பிளவுபடுத்துவார்கள். தங்களது சதியை மறைக்க திசைதிருப்பும் நாடகங்களை அரங்கேற்றுவார்கள்.

இவற்றையெல்லாம் கண்டு மனம் பறிகொடுத்து தமிழ்ச் சமூகம் ஏமாந்துவிடும் என்று எதிர்பார்ப்போர் தோற்றோடுவர். கோடிக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் தங்களது கல்வி உரிமைக்காகவும், வேலை உரிமைக்காகவும் உறுதியுடன் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறேன்.

‘சமூகநீதியை அடைவதற்கான முட்பாதை விரைவில் முடிவுக்கு வரவேண்டும்’ என்றார் கருணாநிதி. அத்தகைய முட்பாதையை மாற்றிப் பண்படுத்த ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story