மோட்டார் வாகன வரி செலுத்த 31-ந்தேதி வரை அவகாசம் - தமிழக அரசு உத்தரவு
மோட்டார் வாகன வரி செலுத்த 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய பெர்மிட் வைத்துள்ள வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப் உள்பட அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரிகளை செலுத்துவதற்கான கருணை கால அளவு ஜூன் 30-ந் தேதிவரை நீட்டித்து உத்தரவிடப்பட்டு இருந்தது. மேலும், தாமதமாக செலுத்தப்படும் வரிகளுக்கான அபராதத்தை வசூலிப்பதும் ஜூன் 30-ந் தேதிக்கு பிறகு தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இம்மாதம் (ஜூலை) 31-ந் தேதிவரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துக்கும் அதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ந் தேதி வரையிலோ அல்லது வாகன போக்குவரத்தை அனுமதிக்கும் வரையிலோ, மோட்டார் வாகன வரியை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதுகுறித்து அரசுக்கு போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதி, அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் வரி செலுத்தும் கருணை கால அளவை ஜூலை 31-ந் தேதிவரை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று 31-ந் தேதிவரை கருணை கால அளவை நீட்டித்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story