பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதற்கான வழிமுறைகள் வெளியீடு


பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதற்கான வழிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 22 July 2020 10:01 PM IST (Updated: 22 July 2020 10:01 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் எல்லா பணிகளும் நிறைவடைந்து கடந்த 16 ஆம் தேதி, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனை தொடர்ந்து தற்போது பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது, மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான நடைமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பிளஸ்-2 மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு வரும் ஜூலை 24 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும்

மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும், மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கவும் ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் அதிகமான மாணவர்கள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story