தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை வட தமிழக மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மாலத்தீவு, கேரளா, லட்சத்தீவு கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story