தஞ்சை மக்கள் மீது அவதூறு: நடிகை வனிதா விஜயகுமார் மீது கலெக்டரிடம் புகார்


தஞ்சை மக்கள் மீது அவதூறு: நடிகை வனிதா விஜயகுமார் மீது கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 24 July 2020 2:45 AM IST (Updated: 24 July 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மக்கள் மீது அவதூறு கருத்துக்களை கூறியதாக நடிகை வனிதாவிஜயகுமார் மீது கலெக்டரிடம் பா.ஜனதா கட்சியினர் புகார் அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு மாவட்ட பா. ஜனதா கட்சியின் கலை இலக்கியம் மற்றும் இந்து அறநிலையத்துறை மாவட்ட தலைவர் ராஜா, பொது செயலாளர் பழனிராஜ், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் அர்ஜூனன், நகர தலைவர் சிவக்குமார் ஆகியோர், கலெக்டர் கோவிந்தராவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளங்களில் தஞ்சை மாவட்டம் குறித்தும், ஆண்களை அவமானப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆணும், 2 பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். இது சகஜம். பெண்களே இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறி உள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் தஞ்சை மக்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தெரிவித்த இந்த கருத்தால் மக்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பாரம்பரியம் மிக்கது. வரலாற்று பெருமை மிக்க தஞ்சையில் வசிக்கும் மக்களை இழிவுபடுத்தும் விதமாக அவர் பேசி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனிதா விஜயகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தவறும்பட்சத்தில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story