கொரோனா பரிசோதனை, காய்ச்சல் முகாமை அதிகப்படுத்த வேண்டும் - கலெக்டர்களுக்கு, தலைமை செயலாளர் அறிவுரை


கொரோனா பரிசோதனை, காய்ச்சல் முகாமை அதிகப்படுத்த வேண்டும் - கலெக்டர்களுக்கு, தலைமை செயலாளர் அறிவுரை
x
தினத்தந்தி 25 July 2020 3:15 AM IST (Updated: 25 July 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரிசோதனையையும், காய்ச்சல் முகாமையும் அதிகப்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் கே.சண்முகம் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

ஒவ்வொரு மாவட்ட கலெக்டரிடமும் தலைமைச் செயலாளர் பேசி, அங்குள்ள கொரோனா பரவல் நிலைமைகளையும், அதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

பின்னர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு 5 புதிய அறிவுரைகளை வழங்கி அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். அதுபோல தொற்று கண்டறிதலை மேலும் தீவிரமாக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி, அங்கு நடக்கும் சோதனைகளில் யார், யாருக்கு என்ன நோய்? என்பதை கண்டறிய வேண்டும். தொற்றுள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவதோடு அவர்களை தொடர்ந்து கண்காணித்து குணப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகள், சந்தைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி, அங்கு தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், தொற்று ஏற்பட்டவர்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தப் பகுதிகளில் மேலும் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான மருத்துவ வசதிகள், முககவசம், சமூக இடைவெளி ஆகியவை பற்றி மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, பொது இடங்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.


Next Story