இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு


இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு
x
தினத்தந்தி 26 July 2020 5:00 AM IST (Updated: 26 July 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி அசைவ பிரியர்கள் இறைச்சியை வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

சென்னை, 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழுமையான ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள மட்டன், கோழிக்கறி, மீன் கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன், கோழிக்கறி, மீன், நண்டு உள்ளிட்ட அசைவ உணவுகள் சாப்பிடுவதை அசைவ பிரியர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் அசைவ பிரியர்கள் இன்று சமைப்பதற்காக நேற்றே அசைவ உணவுகளை வாங்கி வீட்டில் இருப்பு வைத்தனர். இதனால் கோழிக்கறி, மட்டன் கடைகளில் நேற்று வழக்கத்துக்கு அதிகமான கூட்டம் காணப்பட்டது.

காளான், மீல் மேக்கர் உள்ளிட்டவற்றை சிலர் வாங்கினார்கள். அசைவ உணவுக்கு நிகரான சுவை இருப்பதால் காளான், மீல் மேக்கர் உள்ளிட்டவற்றை தேர்வு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதேபோல திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் உள்ள கடைகளில் இன்றைய தேவைக்கான காய்கறி, மளிகை சாமான்களை வாங்குவதற்கு வழக்கம்போல பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நேற்று குவிந்ததையும் காணமுடிந்தது.

Next Story