சென்னையிலேயே 63% மரணங்கள் கணக்கிடப்படாத நிலையில் மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை, அரசு மறைத்திருக்கிறதோ? - மு.க.ஸ்டாலின் கேள்வி


சென்னையிலேயே 63% மரணங்கள் கணக்கிடப்படாத நிலையில்  மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்களை, அரசு மறைத்திருக்கிறதோ? - மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 26 July 2020 1:10 PM IST (Updated: 26 July 2020 1:10 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா உயிரிழப்பு கணக்கீட்டில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே கமிட்டிகள் அமைப்பதாகச் சொன்ன நிலையில் மீண்டும் ஒரு புது கமிட்டியை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் நிர்வாகத் தவறுகளாலும் கொரோனா பரவத் தொடங்கிய நாட்களிலிருந்து தற்போது பெரிய அளவில் பரவியுள்ள நிலையில் இலட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. அடுத்தவர் மீது பழி போட்டுத் தப்பிப்பது, அக்கறையற்ற அணுகுமுறை, தவறான செயல்பாடுகள் என ஒவ்வொரு நாளும் மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, கணக்கில் மறைக்கப்பட்ட 444 கொரோனா மரணங்கள் குறித்து வெளியான உண்மைகள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் பொய்யான அறிக்கைகளையும் போலியான கணக்குகளையும் அம்பலப்படுத்தியுள்ளன.

ஏப்ரல் 20 வெளியிடப்பட்ட அரசாணை எண் 196-ன்படி கொரோனா மரணங்களில் விடுபட்ட கணக்குகளைத் தணிக்கை செய்வதற்காக அரசின் சார்பில் 38 மாவட்ட கமிட்டிகளும், 1 மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அரசாணை வெளியிடப்பட்டு 7 வாரங்கள் கடந்த நிலையில், ஜூலை 11 நிலவரப்படி அத்தகைய கமிட்டிகள் அமைக்கப்பட்டது பற்றியோ அதன் அறிக்கைகள் பற்றியோ பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

ஜூன் 11- ஆம் நாளன்று, அரசாங்கத்தின் இரு துறைகளின் (மக்கள் நல்வாழ்வுத்துறை - சென்னை மாநகராட்சி) மரணக் கணக்கில் உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுவதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 6 வாரகால மறு ஆய்வுக்குப் பிறகு, 444 கொரோனா மரணங்கள் புதிதாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மறைக்கப்பட்ட இந்த கொரோனா மரணங்கள் வெளிப்பட்டதன் காரணமாக, ஜூலை10  வரை சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் விகிதம் என்பது அரசு இத்தனை நாள் தெரிவித்து வந்த 1% என்பதற்குப் பதிலாக 2.67% என்கிற உண்மை வெளிப்பட்டது. அதாவது, ஆட்சியாளர்களின் பொய் அறிவிப்பைவிட ஒருமடங்குக்கு மேல் அதிகம் என்பது அம்பலமானது.

பல அடுக்கு நிர்வாகக் கட்டமைப்பும் போதுமான தகவல் வளங்களும் கொண்டு, களநிலவரத்தை நன்கு கண்காணிக்கும் வாய்ப்பு  கொண்டது சென்னை மாவட்டம். இத்தகை உறுதியான கட்டமைப்பு இருந்தும்கூட, 63% மரணங்களை அ.தி.மு.க அரசு மறைத்து மோசடி செய்ய முடிந்திருக்கிறது என்றால், இந்த அளவுக்கு நிர்வாகக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத மற்ற மாவட்டங்களில் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

சென்னையில் மரணங்கள் மறைக்கப்பட்டது போலவே, ஜூலை10-ல் ஊடகத்தில் வெளியான ஒரு கட்டுரையின் அடிப்படையில், மதுரையில் கோவிட் நோய்த்தொற்று மரண எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள மயானங்கள் 24மணி நேரமும் இயக்கப்படுகின்றன என்கிற செய்தி வெளிப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 10 நாட்களில், மதுரையில் உள்ள மின்மயானங்களில் வழக்கத்தைவிட மும்மடங்கு உடல்கள் கொண்டு வந்து எரியூட்டப்பட்டுள்ளன என்றும், அந்த நாட்களில் இறந்தவர்கள் மட்டும் 97 பேர் என்றும் அந்த ஊடக கட்டுரை தெரிவிக்கிறது.

மதுரையில் ஏற்பட்ட கொரோனா மரணங்கள் குறித்த தொடர் விசாரணையில், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கைக்கும் மயானப் பதிவேடுகளில் உள்ள எண்ணிக்கைக்கும் முரண்பாடுகள் தெரிகின்றன. ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின் அடிப்படையில் பார்த்தால், அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தால் மதுரையில் ஏற்பட்ட உண்மையான மரணங்களின் எண்ணிக்கையைக் கண்டறிய மற்றொரு விசாரணை தேவைப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஜூலை 15-ல் வெளியான ஊடகச் செய்திகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த செய்திகளின் அடிப்படையில் மேலும் 290 மரணங்கள் அரசின் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. தவறான முறையிலும் - மரண எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் வகையிலுமான அறிவிப்புகளையே அரசாங்கம் வெளியிட்டு வருவது அம்பலப்பட்டுள்ளது.

மறைக்கப்பட்ட மரண எண்ணிக்கை தொடர்பான விசாரணைக் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் இதுநாள்வரையில், 63% மரணங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது எனக்கொண்டால்,  தமிழ்நாட்டில் கொரோனா மரண விகிதம் என்பது 3.66% ஆகும். சென்னையில் மட்டும் அது 4.47% என்ற அளவில் இருப்பதையும் அறிய முடியும். முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் அதிகாரிகளும் காட்டுகிற மரண விகிதத்திற்கும் உண்மையான மரண விகிதத்திற்குமான வேறுபாடு பெரிய அளவில் உள்ளது.

ஜூலை 22 அன்று, மரண எண்ணிக்கையில் இனியும் தவறுகள் நேராமல் இருப்பதற்காக மாநில அளவிலான கமிட்டி அமைப்பதாகத் தமிழக அரசு  தெரிவித்துள்ளது. மரணக் கணக்கில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்காக ஏற்கனவே 39 கமிட்டிகளை அமைப்பதாகச் சொல்லியிருந்த எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் புதிதாக ஒரு கமிட்டியை அமைக்கவேண்டும்?

ஜூலை 24 அன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், இனி தவறான கணக்கீடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட - குறைந்த அளவிலான மரண எண்ணிக்கை கொண்ட அறிக்கைக்கு முரணாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எண்ணிக்கை வெளிப்படக்கூடாது என்பதற்கான மறைமுக எச்சரிக்கைதான் இந்த கடிதமா என்கிற கேள்வியும் எழுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story