தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு: சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன


தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு:  சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன
x
தினத்தந்தி 26 July 2020 1:50 PM IST (Updated: 26 July 2020 1:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் 4-வது வாரமாக தளர்வில்லாத ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் ஆறாவது ஞாயிற்றுக் கிழமையாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அண்ணா சாலை , பூந்தமல்லி நெடுஞ்சாலை , ஜிஎஸ்டி சாலை , மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க, 288 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரவை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, அவர்களிடம் இருந்து போலீசார், அபராதம் வசூலிக்கின்றனர்.

முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் காலை உணவுக்காக அம்மா உணவகங்களில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று காலை உணவை வாங்கி சென்றனர்.

திருவொற்றியூர் காலடிபேட்டை சந்தை மற்றும் தேரடி சந்தை பகுதிகளில், நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்து கடைகளையும் அடைத்து, முழு ஊரடங்கிற்கு  வியாபாரிகள் முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றனர். போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தூங்கா நகரில் தளர்வில்லா ஊரடங்கு அமல்

மதுரையில், இன்று தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிய 48ஆயிரம் நபர்களிடம் இருந்து 70 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

4-வது வாரமாக தளர்வில்லா ஊரடங்கு அமல்

நெல்லை மாநகரில் 4-வது ஞாயிற்றுக்கிழமையாக தளர்வில்லா ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இல்லாததால், முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சி அளித்தது. நெல்லையில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 595 பேரில் 2 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர்

கடலூரில் 4வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிபுலியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகள் இன்றி சுற்றித்திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூர்

திருவாரூரின் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, நகைக்கடை தெரு, பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை, ஆகிய பிரதான சாலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தஞ்சை

தஞ்சையில் கீழ ராஜ வீதி, அண்ணா சாலை, ரயிலடி, ஆபிரஹாம் பண்டிதர் சாலை ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் தீவிரம் புரியாமல் அரண்மனை விளையாட்டு மைதானத்தில் சிலர் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் டிரோன் கேமிராவில் பதிவாகின.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 135க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைப் பகுதிகளைக் கடப்பவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாநகரத்தின் முக்கிய சாலைகள், மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்சி

திருச்சி மாநகரில் உள்ள மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கே.கே. நகர், தில்லை நகர், பெரியக்கடை வீதி, மலைக்கோட்டை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கண்காணிக்க 1500 காவலர்களும், 500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


நீலகிரி

நீலகிரி மாவட்டம் உதகையில் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஆதரவு அளித்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. 14 சோதனைச் சாவடிகள் மட்டுமின்றி, உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கையொட்டி பால் நிலையங்கள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பேருந்து நிலைய பகுதி, கேணிக்கரை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகள் இன்றி சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பால்நிலையங்கள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 200 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story