சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது - மதுரை ஐகோர்ட் கிளை


சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது -  மதுரை ஐகோர்ட் கிளை
x
தினத்தந்தி 17 Aug 2020 3:17 PM GMT (Updated: 17 Aug 2020 3:17 PM GMT)

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை கூறி உள்ளது.

மதுரை

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த கொலை சம்பவத்தை மதுரை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் மூடி முத்திரையிட்ட கவரில் இரட்டை கொலை வழக்கின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதனை படித்த பிறகு நீதிபதிகள், விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், அறிவியல்பூர்வ சோதனை முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்றனர்.

இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அர்ஜூனன், மக்கள் கண்காணிப்பகத்தில் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்கைள நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, உயர்மட்டக்குழு அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், சிபிஐ மீண்டும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப். 8-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story