முதுநிலை மருத்துவ படிப்புகளில் சிறப்பு இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு


முதுநிலை மருத்துவ படிப்புகளில் சிறப்பு இடஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
x
தினத்தந்தி 1 Sep 2020 12:12 AM GMT (Updated: 1 Sep 2020 12:12 AM GMT)

முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

மருத்துவ மேல்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்கலாம் எனவும், இதில் தலையிட இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை-எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணியாற்றுவதை ஊக்குவிக்கவும் கொண்டு வந்த சலுகையில் இந்திய மருத்துவ கவுன்சில் அநியாயமாக குறுக்கிட்டு அந்த சலுகைகளை ரத்து செய்து அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற சுகாதாரத்திற்கும் பேரிடரை ஏற்படுத்தியது.

இதற்கு எதிராக, ‘முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம்’ என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, உயிர்காக்கும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி நோய் நொடியின்றி கிராமப்புற மக்களைப் பாதுகாத்திடவும் வழங்கப்பட்டுள்ள சிறந்த தீர்ப்பாகும்.

மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததிலிருந்து மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதன் மற்றோர் அங்கமாகவே முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளையும் பறித்து கடந்த 2 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும், சட்டப்போராட்டத்தையும் நடத்திடும் நிலைக்கு தள்ளியது.

மாநில உரிமைகளில் கண்மூடித்தனமாக குறுக்கிடக்கூடாது என்று இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தலையில் சுப்ரீம் கோர்ட்டு வைத்துள்ள குட்டு கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு நினைவுபடுத்தும் மிகச்சிறந்த பாடம் என்றே நான் கருதுகிறேன்.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ கல்வியில் தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட சலுகையும், சமூகநீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது. மாநில உரிமைக்கும் சமூக நீதிக்குமான இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்விற்கு எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story