ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன; சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்தன.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, பல்வேறு முக்கிய தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும் பஸ் போக்குவரத்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால், ஓய்வு இன்றி ஓடிய பஸ்கள் பணிமனைகளில் முடங்கி ஓய்வு எடுத்து வந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த முக்கிய தளர்வுகளில் ஒன்றாக மாவட்ட எல்லைகளுக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மாவட்ட எல்லைகளுக்குள் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 33 பணிமனைகளில் இருந்து சுமார் 3 ஆயிரம் பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் சென்னை மாவட்ட எல்லை வரை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இன்று காலை பணிமணைகளில் இருந்து பேருந்துகள் கிளம்பிச்சென்றன. சென்னையில் 161 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்துகள் சேவை தொடங்கியுள்ளது. அதேபோல் மாவட்டங்களுக்குள்ளும் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. பேருந்துகளில் 22 முதல் 24 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அதாவது, ஒரு இருக்கைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே இனிமேல் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டோ, படிகளில் தொங்கியபடியோ பயணிக்க முடியாது.
பயணிகள் பேருந்துகளின் பின்பக்கமாக ஏறி முன் பக்கமாக இறங்க வேண்டும். பின்பக்கம் ஏறும் போது பட்டிக்கட்டின் பக்கவாட்டில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கும். பயணிகள் அந்த கிருமிநாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், பயணிகள் பேருந்துகளில் இருந்து எச்சில் துப்புவதற்கும் அனுமதிக்கப்படுவது இல்லை.
இதே போன்று, பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கைகளில் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு தான் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், பஸ்கள் பணிமனைகளில் இருந்து புறப்படும் போதும், இரவு பணிமனைக்கு வரும் போதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் என்றும், பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பேருந்து நிலையங்களில் வைத்து கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story